விருதுநகர்: சிவகாசி அருகே உள்ள ரிசர்வ்லைன் திருப்பதி நகரை சேர்ந்தவர் சாலைமுத்து, இவரது மனைவி பாண்டிதேவி (வயது 37). இவர் சித்துராஜபுரத்தில் உள்ள அங்கன்வாடியில் பணியாற்றி வந்தார். கட்டிட தொழிலாளியான சாலைமுத்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிட பணியின்போது தவறி விழுந்து உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து பாண்டிதேவி நடக்க முடியாத மாற்றுத்திறனாளி மகனையும், பெண் பிள்ளையும் வைத்து கொண்டு கடும் பொருளாதார சிக்கலை சந்தித்து வந்த அவர், தொடர்ந்து அங்கன்வாடி உள்ளிட்ட பல்வேறு அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். இருப்பினும் அரசு வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்து வந்த அவர், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக முதல்வர் ஸ்டாலினின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் தனது மாற்றுத்திறனாளி மகனுடன் கலந்து கொண்டு, தனது நிலையையும் தமக்கு வேலை வாய்ப்பு வழங்க கோரியும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.
பின்னர் கடந்த ஆண்டு இதே நாளில் (4.02.2022) அவரது மாற்றுத்திறனாளி மகன் திடீரென உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது கணவரின் விபத்து மரணத்திற்கு கட்டுமான நலவாரியம் சார்பில் 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாண்டிதேவிக்கு அங்கன்வாடி பணி வழங்கபட்டது. பாண்டிதேவி தனது தாயின் அரவணைப்பில் சித்துராஜபுரம் அங்கன்வாடி மையத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் பாண்டிதேவியும், அவரது 12ம் வகுப்பு படிக்கும் மகள் புவனேஷ்வரியும் தற்கொலை செய்து கொண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாண்டிதேவியின் மாற்றுத்திறனாளி மகன் மாகராஜா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம் தேதி இறந்த நிலையில், மகன் இறந்த நாளில் பாண்டி தேவி மிகுந்த மன உளைச்சளில் இருந்துள்ளார். கணவர், மகன் இறந்த விரக்தியில் இருந்த பாண்டி தேவி மகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உளவுத்துறை இயக்குனர் வீட்டில் சிஆர்பிஎப் வீரர் தற்கொலை!