விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையத் தொடக்க விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி ஆகியோரை வரவேற்கும் விதமாக அருப்புக்கோட்டையில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அமைச்சர்கள், பிளக்ஸ் பேனர்களை உடனடியாக அகற்றினால்தான் நிகழ்ச்சியில் கலந்து கொள்வோம் என கூறினர். அதைத் தொடர்ந்து அனைத்து பிளக்ஸ் பேனர்களும் அகற்றப்பட்டன.
அதன்பின், நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர்கள், பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையை தொடங்கி வைத்து 1,185 பயனாளிகளுக்கு ரூ.9.13 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.