விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேவுள்ள சம்மந்தபுரம் பகுதியில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலங்களாக தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். இக்கருத்தை பலமுறை சட்டப்பேரவையில் நான் பேசியுள்ளேன். தற்போது அவர் அதனை தைரியமாக அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். இதற்கு எங்களது பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு இந்தியா முழுவதிலும் மக்கள் தன்னெழுச்சியாக சாதி மதங்களை மறந்து போராடி வருகின்றனர். இச்சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என மேற்குவங்கம், கேரளா, புதுச்சேரி மாநில சட்டபேரவையில் தீர்மானம் கொண்டுவந்தது போல் தமிழ்நாடு அரசும் சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற வேண்டும்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடர்ச்சியாக கலவரங்களை உருவாக்கும் விதமாக பேசி வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அவரை அதிமுக தலைமை கண்டித்து, தொடர்ந்து இதுபோன்று பேசி வந்தால் அவரை அமைச்சர் பதவியில் இருக்க நீக்க வேண்டும் என்றார்.
மேலும், வருகிற 14ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளனர். இந்த பட்ஜெட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும் வகையில் அமைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: 'காவிரி சமவெளி வேளாண் மண்டல அறிவிப்பு சட்டமாக்க வேண்டும்' - பழ. நெடுமாறன்