சென்னை: கும்பகோணத்தில் உள்ள பொற்றாமரை குளம் உள்ளிட்ட 44 குளங்கள், அதற்கு நீர் செல்லக்கூடிய 11 வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 2018ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், இந்த உத்தரவை அமல்படுத்தப்படவில்லை என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி அளித்த அறிக்கையில், “ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் ஒத்துழைப்பு வழங்கவில்லை” என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: ஆட்சியர் தலைமையில் நடத்த நீதிமன்றம் உத்தரவு!
அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்த தயக்கம் காட்டும், கும்பகோணம் மாநகராட்சி ஆணையருக்கு எதிராக உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி நகராட்சி நிர்வாக துறை முதன்மைச் செயலாளருக்கு உத்தரவிட்டனர்.
மாநகராட்சி ஆணையருக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து ஜனவரி 27 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யும்படி, நகராட்சி நிர்வாகத்துறை முதன்மைச் செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.