தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருள்களை விநியோகிக்கும் நோக்கில், மாநிலம் முழுவதும் ரூ.9.66 கோடி மதிப்பீட்டில் மூன்றாயிரத்து 501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் திட்டத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி தொடங்கிவைத்தார்.
இந்த நிலையில், விருதுநகருக்கு இது போன்ற 36 நகரும் நியாயவிலைக் கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று பயன்பாட்டிற்கு வந்தது. இந்த வாகனங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் கண்ணன் முன்னிலையில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று (அக். 12) தொடங்கிவைத்தார்.
மாவட்டத்தில் 49 கூட்டுறவு நிறுவனங்கள் 36 வாகனங்கள் மூலம் 60 இடங்களில் அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் திட்டத்தின் மூலம் ஏழாயிரத்து 999 பயனாளிகள் பயன்பெற உள்ளனர்.
இந்தத் திட்டத்தின்படி வாகனங்கள் மூலம் குடியிருப்புப் பகுதிகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மணற்பாங்கான பகுதிகள், காட்டுப் பகுதிகளில் வசிப்போருக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த நகரும் நியாயவிலைக் கடைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அலுவலர்கள் 2 பேர் இடமாற்றம்