திமுக தரப்பு தன் மீது புகாரளித்துள்ளது குறித்து பேட்டியளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் நான் பேசியதை முழுமையாகக் கேட்காமல், திமுக அதுகுறித்து புகார் அளித்துவருகிறது. அதிமுக தொணடர்கள் மீது தாக்குதலில் ஈடுபடுபவர்களை கண்டு சும்மா இருக்க மாட்டோம், திரும்பி தாக்குவோம் என மாவட்டச் செயலாளர் மற்றும் அமைச்சர் என்ற முறையில் கூறினேன். வன்முறையை தூண்டும் நோக்கில் கூறவில்லை, வேகமாகச் செயல்படுபவர்களை வழக்கு போட்டு முடக்குவது திமுகவின் வாடிக்கை. வழக்குகளைக் கண்டு நாங்கள் மிரளப் போவதில்லை, வருவது வரட்டும் பார்த்துக் கொள்ளலாம்’ என்றார்.
மேலும், நடிகர்களின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு ராஜேந்திர பாலாஜி, ‘விஜய், ரஜினி, கமல் கூட்டணி சேர்ந்தால் அவற்றை எதிர்கொள்ளும் அளவிற்கு அதிமுக பலம் வாய்ந்த கூட்டணியை அமைக்கும். திரை உலகின் அதிசய நாயகன் தல அஜித் அரசியலுக்கு வந்தால் முன்னோடியாக விளங்க வாய்ப்புள்ளது. நாளை என்ன நடக்கும் என யாருக்கு தெரியும்.
’பாட்ஷா’ படம் வெளியானபோது ரஜினி கட்சியை ஆரம்பித்திருந்தால் அவர் ஆட்சியை பிடித்திருப்பார், காலம் கடந்துவிட்டது. இனி வரும் தேர்தல்களில் பணத்தை வைத்து மட்டும் வெற்றிபெற முடியாது, மக்களின் ஆதரவு வேண்டும். பணத்தை ஒரு கருவியாக வைத்துக்கொள்ளலாம்’ என தெரிவித்தார்.