விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வாக்குச்சாவடி நிலைய முகவர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று(நவ-19) நடைபெற்றது. இக்கூட்டத்தில் விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளரும், பால்வளத் துறை அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி, மற்றும் கிழக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சட்டமன்ற தேர்தல் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார். கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "ராஜபாளையம் நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம், ரயில்வே மேம்பாலம் கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகியவை ஜெயலலிதா ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. ஆனால் திமுகவால் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது என்று விளம்பரத்திற்காக திமுக எம்.எல்.ஏ போட்டோவுக்கு போஸ் கொடுத்து வருகிறார். முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் , தங்கம் தென்னரசு, எத்தனை கல்லூரிகளை, விருதுநகர் மாவட்டத்திற்குக் கொண்டு வந்தனர்? தற்போது நான் அமைச்சராகி நான்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கொண்டு வந்துள்ளேன்.
ஸ்டாலின் ஒரு சரியான பைத்தியக்காரன். பைத்தியம்கூட சில நேரங்களில் உண்மை பேசும், ஆனால் ஸ்டாலின் அனைத்தும் பொய்யாகவே பேசிவருகிறார். ரயில் ஓடினாலும், விமானம் பறந்தாலும் தன்னால்தான் நடக்கிறது என்று ஸ்டாலின் கூறி வருகிறார்.
விருதுநகர் மாவட்டத்தில் 7 தொகுதியிலும் அதிமுகதான் வெற்றி பெறும். திமுக குடும்ப சொத்தான அண்ணா அறிவாலயத்தை ஸ்டாலின் மூன்று பங்காகப் பிரித்து கனிமொழி மற்றும் அழகிரிக்கு வழங்காவிட்டால் அதிமுக அதற்காகப் பஞ்சாயத்துப் பண்ணும். அறிவாலயத்தையும், கட்சியையும் எடுத்துக் கொண்டு அழகிரியைத் தனிமையில் விட்டதால் திமுகவுக்குச் சங்கு ஊத கிளம்பிவிட்டார்" எனக் கூறினார்.