விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகர்புறத்தில் உள்ள ஜவுளி மற்றும் நகைக்கடை, நூற்பாலை விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் நகைக் கடை ஜவுளிக்கடை சிறிய வகை பட்டாசு ஆலைகள் செயல்பட வேண்டிய நேரம் மற்றும் கரோனா வைரஸ் பரவாமல் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பெருமாள், அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதன் பின்னர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், "விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய தொழில்களான பட்டாசு தொழில், ஜவுளிக் கடைகள், நெசவு தொழில், நகைக்கடை, பஞ்சு ஆலை தொழில், பின்னலாடை தொழில் உள்ளிட்டவை படிப்படியாக இயங்கும். இந்த 6 தொழில்களை தளர்வு கட்டுப்பாடுடன் இயங்க ஆட்சியர் மூலம் தொழிற்சாலை உற்பத்தியாளர் மற்றும் உரிமையாளர்களிடம் தெரிவிக்கப்படும்.
மேலும், ஆம்னி பேருந்து கட்டண உயர்வு போன்றவை தவிர்க்க முடியாத ஒன்று. மக்களை பாதிக்காத திட்டங்களை தமிழ்நாடு அரசு எடுக்கும்" என்றார்.
இதையும் படிங்க: ரேபிட் டெஸ்ட் கருவிகளுக்கு மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை - சத்யேந்தர் ஜெயின்