தமிழ்நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இன்று (செப்.07) விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, விருதுநகர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பள்ளிக்கல்வித்துறை சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு 11 சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், ''ஆசிரியர்கள் பணி தான் மிகப்பெரிய மகத்தான பணி. என்னை எல்லாம் 4 அடி அடித்து வாத்தியார் வளர்த்ததால் தான் ஓரளவுக்கு அறிவோடு பேசுகிறேன். அடிக்கிறார் என்று வருத்தப்பட்டு பள்ளிக்கூடம் போகாமல் இருந்திருந்தால் கல்வி அறிவே இல்லாமல் போயிருக்கும். எவ்வளவு செல்வங்கள் பெற்றாலும் அவை அழியக்கூடிய செல்வம்தான். கல்விதான் உயர்ந்த செல்வம்'' என்றார்.
தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், கரோனா தொற்றின்போது சிறப்பாகப் பங்காற்றிய ஆசிரியர் ஜெயமேரியை பெரிதும் பாராட்டி எதிர்காலத்தில் நல்லாசிரியர் விருது கிடைக்க வாழ்த்தினார்.
இதையும் படிங்க: வயிற்றுப்பசி மட்டுமல்லாமல் மாணவர்களின் அறிவுப்பசியையும் போக்கும் சிவகாசி ஆசிரியை ஜெயமேரி!