விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாம்சாபுரம் பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "நமக்குள் இருந்த சிறிய கவனக் குறைவினால் திமுக சத்தமில்லாமல் மக்களவை மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டது. இரட்டை இலைக்கு இருக்கும் சக்தி என்றும் மாறாது. இந்தியா வந்துள்ள ட்ரம்பே இரட்டை இலை சின்னத்திற்காக இரு விரல்களையும் தூக்கிக் காட்டுகிறார்.
இந்தக் கட்சி அழியாது. அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றும் திமுகவுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. ஸ்டாலினுக்கு தூக்கம் இல்லை. தமிழ்நாடு கோரிக்கை குறித்து மக்களவையில் திமுக பேசுவதில்லை. ஆனால், துணை முதலமைச்சர் மகன் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் ஒவ்வொன்றையும் சொல்லி மக்களுக்கு தேவையானதை வாங்கிக் கொண்டு வருகிறார்.
சிஏஏ குறித்து ஸ்டாலினிடம் முலமைச்சர் பழனிசாமி கேள்வி கேட்டதால் ஸ்டாலின் பதில் சொல்ல முடியாமல் ஓடிவிட்டார். இஸ்லாமியர்களைத் தூண்டிவிட்டு ஸ்டாலின் மதக்கலவரத்தை உருவாக்கிறார். எந்த மத மக்களும் ஒரு காலமும் ஸ்டாலினுக்கு ஓட்டு போட மாட்டார்கள். ஸ்டாலினுக்கு முதல்வராகும் யோகம் இல்லை, எதிர்க்கட்சித் தலைவராக வருவது கூட சந்தேகம்தான்" என்றார்.
இதையும் படிங்க: 'பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும்' - தமிழ் புலிகள் அமைப்பினர் போராட்டம்