விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சுமார் ரூ.168 கோடி மதிப்பீட்டில் சுமார் 500 படுக்கைகள் கொண்ட புதிய கட்டடம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில் அந்த கட்டடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரிப்பன் வெட்டி மருத்துவமனை கட்டடத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினார்கள். மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளது போல் அனைத்து வசதிகளையும் கொண்ட இரண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தையும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும் கலைக் கல்லுரியில் தமிழ் மன்றம் செயல்பட்டு வருவதுபோல் விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரியிலும் தமிழ் மன்றம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 150 மாணவ, மாணவிகளுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , ’தமிழகத்தை பொறுத்தவரையில் மருத்துவ கட்டமைப்பு மிக சிறந்த இடத்தில் இருப்பதால் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 10க்கும் மேற்பட்ட விருதுகளை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கி உள்ளது.
10-க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்று அனைவருக்கும் ஆன மருத்துவ சேவையில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறது. கர்ப்பிணிகளுக்கு மஞ்சள் காமாலை கண்டறிவதில் தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறது. கருத்தடை சாதனங்கள் பொருத்துவதில் தமிழகம் முதல் இடத்தில் இருந்து கொண்டு இருக்கிறது.
மேலும் சுகப் பிரசவத்திற்கு தமிழகம் எடுத்த முன்னெடுப்பு காரணமாக அதிலும் தமிழகம் முதலிடத்தில் இருந்து கொண்டிருக்கிறது. மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் சிறப்புத் திட்ட செயல்பாட்டில் தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறது. இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 திட்டத்தின் மூலம் தமிழகத்தில் விபத்துகள் குறைந்து ஒரு லட்சத்து 35ஆயிரம் உயிர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் காப்பாற்றப்பட்டு இருக்கிறது’ என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், ’விருதுநகர் மாவட்டத்தில் தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி பல்வேறு புதிய மருத்துவ கட்டமைப்பு வசதிகள், மேம்படுத்தப்பட்ட வசதிகள், மக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
விருதுநகரில் 168 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 500 படுக்கை உள்ள 6 மாடி கட்டடம் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதில் 12 வகையான சிறப்பு துறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மூலம் 708 புதிய மருத்துவமனைகள் தொடங்கப்பட உள்ளன. 21 மாநகராட்சிகளிலும் 63 நகராட்சிகளிலும் மருத்துவமனைகள் கட்டும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதற்கான கட்டடப் பணிகள் முடிந்து இந்த மாத இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழக முதலமைச்சர் அதனை திறந்து வைக்க உள்ளார்.
மேலும் 708 மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருந்தாளுனர்கள், உதவியாளர்கள் என பல்வேறு பணிகளுக்கு பணி நியமனம் செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த 708 மருத்துவமனைகளில் விருதுநகரில் ஏழு மருத்துவமனைகள் தொடங்கப்பட உள்ளது’ எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அமைச்சர், இரண்டு மூன்று மாதங்களாக கரோனா தடுப்பூசி மத்திய அரசால் வழங்கபடவில்லை எனவும், கரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியும் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது என்றார். மேலும் தமிழகத்தில் 3 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது எனவும், புதிய கரோனா தடுப்பு மருந்தான மூக்கு வழியே செலுத்தும் மருந்தை தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என மத்திய அரசை கேட்டு உள்ளோம் எனவும் தெரிவித்தார்.
’இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 திட்டத்தின் மூலம் தமிழகத்தில் விபத்துகள் குறைந்து ஒரு லட்சத்து 35 ஆயிரம் உயிர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்துக்காக தமிழக அரசு 121 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 2020-ம் ஆண்டு இட ஒதுக்கீடு இல்லாத பணியாணைகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது என நீதிமன்றம் தெரிவித்து உள்ளது’ என்றார்.
மேலும் பணி நீக்கம் செய்யப்பட்ட தற்காலிக செவிலியர்கள் 2,300 பேருக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது எனவும், தற்போது 14 ஆயிரம் சம்பளம் வாங்கிய அவர்களுக்கு 18 ஆயிரம் சம்பளத்துடன் பணி வழங்க முதலமைச்சர் ஒப்புதல் அளித்து உள்ளார் எனத் தெரிவித்தார்.