விருதுநகர்: சாத்தூர் வெடி விபத்தில் தாய் தந்தையை இழந்த குழந்தை நந்தினிக்கு அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தனது சொந்த நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.
சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் பிப்ரவரி 12ஆம் தேதி பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதில் நடுசுரங்குடி கிராமத்தைச் சேர்ந்த நான்கு பேரும் அடங்குவர். இவர்களில் பாக்யராஜ், செல்வி தம்பதிக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயதான நந்தினி என்ற மகள் உள்ளார்.
தாய் தந்தையை இழந்துதவிக்கும் சிறுமி நந்தினியை நேரில் சென்று பார்த்த கே.டி. ராஜேந்திர பாலாஜி, அவருக்கு அனைத்து உதவிகளும் செய்துதருவதாக ஆறுதல் கூறினார்.
பின்னர் சிறுமிக்குத் தேவையான ஆடைகளையும், பொருள்களையும் வழங்கிய அவர், சிறுமி 12ஆம் வகுப்பு வரை படிப்பதற்கு ஐந்து லட்சம் ரூபாயை தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.
மேலும், சிறுமியின் மேற்படிப்பு, திருமணம் உள்ளிட்டவற்றுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துதருவதாக வாக்குறுதி அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “பட்டாசு வெடி விபத்தில் தாய் தந்தையை இழந்த சிறுமிக்குத் தமிழ்நாடு அரசு கொடுத்த ஆறு லட்சம் ரூபாய், குழந்தையின் வங்கிக் கணக்கில் சேமிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நான் கூறியபடி இந்தக் குழந்தையை எனது சொந்த குழந்தையாக நினைத்து, அனைத்து உதவிகளும் செய்துகொடுத்துள்ளேன். இப்போது எனது சொந்த நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வழங்கியுள்ளேன்” என்றார்.