விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்த கணேஷ் என்பவரின் ரேசன் கார்டை பயன்படுத்தி கடந்த 2008 ஆம் ஆண்டு கேரளா மாவயிஸ்ட்களான அனுப்மேத்யு ஜார்ஜ், சைனி ஆகியோர் போலி சிம்கார்டு வாங்கியது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக இன்று அனுப்மேத்யுஜார்ஜ் மற்றும் சைனி ஆகியோரை கோவை போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனை அடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஏப்ரல் 1ம் தேதி இருவரையும் ஆஜர்ப்படுத்த உத்தரவிட்டார்.
இதையடுத்து நீதிமன்றத்தை விட்டு வெளியில் வந்த மாவோயிஸ்ட்கள் பொள்ளாச்சி பாலியல் பலாத்காரத்தை கண்டிப்பதாகவும், பாலியல் வழக்கில் அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறையின் கூட்டு சதியை முறியடிப்போம் எனவும், கோவை மாவட்ட எஸ்.பி.பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்கு மக்கள் போராட்டம் ஒன்றே தீர்வு எனவும் கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.