வேலூர்: வேலூர் மாவட்டதில் நடந்த இச்சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கையின் படி, 13 வயது சிறுமி ஒருவர் கடந்த 17ஆம் தேதி இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது வீட்டின் அருகே உள்ள புதர் பகுதிக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் மகளை தேடி சிறுமியின் தந்தை சென்றுள்ளார்.
அப்போது, அருகே உள்ள கல்குவாரியில் இருந்து மகளின் அலறல் சத்தம் கேட்டு, உடனடியாக கல்குவாரிக்கு விரைந்து சென்றுள்ளார். அங்கு, அவரது மகளான 13 வயது சிறுமி மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில், இந்த சம்பவ நடந்த இடம் வெறொரு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டதாக இருப்பதால் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு புகாரை வாங்காமல் திருப்பி அனுப்பியதாகவும், ஆனால் அங்கும் புகாரை வாங்காமல் மீண்டும் முன்பு புகார் கொடுத்த அதே காவல் நிலையத்திற்கு போலீசில் புகார் செய்ய அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில், போலீசார் புகாரை வாங்க மறுத்து அலைகழித்ததால் சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து முதன்முதலில் சிறுமியின் தந்தை புகார் அளித்த அதே காவல் நிலையத்திலேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களைப் பிடிக்க துணைக் காவல் கண்காணிப்பாளர் சாரதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரஷ்ய அரசு பெயரில் தொழிலதிபரிடம் ரூ.7.32 கோடி மோசடி; தாசில்தார் உள்ளிட்ட 9 பேர் கைது!
போலீசாரின் இந்த விசாரணையில், சிறுமி இயற்கை உபாதை கழிக்க சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த சின்ராஜ் (30), வீரப்பன் (28), இளமதன் (28) ஆகிய மூன்று பேரும் மது அருந்திக்கொண்டு இருந்ததாகவும், அப்போது சிறுமி தனியாக இருப்பதை அறிந்த அவர்கள் மூன்று பேரும் சிறுமியின் வாயைப் பொத்தியபடி அப்பகுதியில் உள்ள கல்குவாரிக்கு தூக்கிச் சென்று, அங்கு வைத்து சிறுமியை அடித்து உதைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததும போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், மகளை தேடி சிறுமியின் தந்தை கல்குவாரி பகுதிக்கு வருவதை அறிந்த மூன்று பேரும் அங்கிருந்து இருளில் மறைந்து தப்பி சென்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, துணைக் காவல் கண்காணிப்பாளர் சாரதி தலைமையிலான தனிப்படையினர் சித்தூர் பகுதியில் பதுங்கி இருந்த சின்ராஜ், வீரப்பன், இளமதன் ஆகிய மூன்று பேரை கைது செய்து வேலூர் அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனை அடுத்து, ஆய்வாளர் காஞ்சனா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, குற்றம் சுமத்தப்பட்ட மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்