விருதுநகர் மாவட்டம், அரசு மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவமனையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சட்டப்பேரவை உறுப்பினரும் காங்கிரஸ் கொறடாவுமான மாணிக்கம் தாகூர், கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விருதுநகரில் இன்று வரை 45 வயது மேற்பட்ட 1,21,749 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கரோனாவின் இரண்டாவது அலை மிகவும் பயங்கரமானதாக இருக்கும் என்று உலகமே அஞ்சுகிறது. எனவே, 45 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருமே கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
மத்திய அரசு கரோனா முதல் அலையைக் கட்டுப்படுத்தியதற்கான பெருமையை எவ்வாறு எடுத்துக் கொள்கிறதோ அதைப் போல் பழியையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கரோனா காலத்தில் என்ன செய்தார், என்ன செய்யவில்லை என்பதை நாம் அறிவோம்.
மாநில அரசு, அலுவலர்களிடம் பொறுப்பைக் கொடுத்து விட்டுவிட்டு அவர் பல்லாங்குழி ஆடிக்கொண்டிருந்தார். ராகுல்காந்தி ஏழு அம்ச திட்டத்தை பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 40 கோடி பேருக்கு மேல் உள்ளனர். அனைவருக்கும் இதே வேகத்தில் தடுப்பூசி போட வேண்டும் என்றால் அதற்கான வலிமையான திட்டத்தை வகுக்க வேண்டும்.
மத்திய அரசு மாநில அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். தேவையான தடுப்பூசி டோஸ்களை வழங்க வேண்டும். அதே போல, கரோனா தடுப்பூசி இறக்குமதி செய்வதற்கும் ஏற்றுமதி செய்வதற்கும் உள்ள தடைகளை நீக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு அபராதம்