விருதுநகர் மெயின் பஜாரில் சுமார் 700-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டுவருகின்றன. இந்தக் கடைகளில் விருதுநகரைச் சுற்றியுள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து சில்லறை வியாபாரிகள், காய்கறிகள் பலசரக்கு பொருள்கள் வாங்கி விற்பனை செய்வது வழக்கம். இந்தப் பகுதிக்கு நாளொன்றுக்கு 10,000 நபர்களுக்கு மேல் வந்துசெல்கின்றனர்.
இந்த நிலையில் விருதுநகர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அருப்புக்கோட்டை சாத்தூர் வழித்தடங்களில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மெயின் பஜார் வழியாக இயக்கப்படுகின்றன. இதனால் மெயின் பஜாரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க இந்தப் பகுதிகளில் பேருந்துகளை இயக்கக் கூடாது எனக் கடந்த இரண்டு வருடங்களாக வியாபாரிகள் மாவட்ட நிர்வாகத்திற்குப் பலமுறை கோரிக்கைவிடுத்தும், அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மேலும் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து மெயின் பஜாரில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் கறுப்புக் கொடி போராட்டம், மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே இந்தப் பேருந்துகள் மெயின் பஜார் வழியாகச் செல்வதற்கு இருசக்கர வாகனங்கள் இடையூறாக இருப்பதாகக் கூறி காவல் துறையினர் இருசக்கர வாகனங்களைக் கைப்பற்ற முயன்றபோது காவலர்களுக்கும் கடை வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் தங்கள் கடைகளை அடைத்து விருதுநகர் மாரியம்மன் கோயில் முன்புறம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சம்பத் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அறிவுறுத்தினார். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் வாபஸ்: முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த பி.ஆர்.!