விருதுநகர் மாவட்டம் ஆவியூர் அருகே உள்ள முடுக்கள்குளம் பகுதியில் இருந்து மதுரை நெல்மேடு பகுதிக்கு நெல் மூட்டைகளை ஏற்றி லாரி ஒன்று சென்றது. அந்த லாரி மதுரை ரிங் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது லாரியின் பின் பக்க டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் சண்முகம், கருப்பையா, வீரபத்திரன் ஆகிய மூன்று சுமை தூக்கும் தொழிலாளிகள் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், மதுரையில் நிகழ்ச்சி ஒன்றை முடித்துக்கொண்டு விருதுநகா் நோக்கி சென்றுகொண்டிருந்த தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இந்த விபத்தை பார்த்துள்ளார். உடனே அவர் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு, விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த மூன்று சுமை தூக்கும் தொழிலாளா்களையும் மீட்டு, அவருடைய பாதுகாப்பு வாகனத்தில் அழைத்துச் சென்று அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.
பின்னா் படுகாயமடைந்த சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு சிகிச்சைக்காக ஒரு லட்ச ரூபாய் பணத்தை வழங்கினார். இதனையடுத்து அந்த தொழிலாளர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.