விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று நள்ளிரவில் ராஜபாளையத்திலிருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும் விருதுநகரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஓட்டுநர்கள் மகேந்திரமணி, கோபால் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதில் ஓட்டுநர் மகேந்திரமணி லாரியின் இடிபாடுகளிடையே சிக்கிக் கொண்டார்.
பின்னர், இதனைக்கண்ட பொதுமக்கள் நத்தம்பட்டி காவல் நிலையத்திற்க்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், அருகிலிருந்தவர்களின் உதவியுடன் கடப்பாறை, கம்பி போன்றவற்றைக்கொண்டு லாரியின் முகப்பை உடைத்து மகேந்திரமணியை மீட்டனர்.
இதைத் தொடர்ந்து விபத்தில் சிக்கிய இரண்டு ஓட்டுநர்களையும் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த விபத்தால் மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்து - 3 பேர் உயிரிழப்பு