விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் எம்ஜிஆரின் 104ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலினின் ஆட்டத்துக்கு ஆண்டவன் தக்க தண்டனை கொடுப்பான் என்றும், தமிழை விற்று திமுகவினர் பிழைப்பு நடத்துவதாகவும் குற்றஞ்சாட்டினார். முள்ளிவாய்க்காலில் இரண்டு லட்சம் தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சியுடன் திமுக துணை போனது என்று விமர்சித்த அமைச்சர், தமிழர்களை சுட்டுக் கொன்ற ராஜபக்சேவை பார்த்தால் துப்பாக்கி எடுத்து சண்டை போடத் தோன்றுவதாகக் கூறினார்.
இளைய தலைமுறை நடிகர்கள் அனைவரும் எம்ஜிஆர் ஆட்சி வழங்குவதாக கூறிய கருத்தை மேற்கோள்காட்டிய ராஜேந்திர பாலாஜி, யாராவது கருணாநிதி ஆட்சி தருவேன் என்று கூறுகிறார்களா? என்று கேள்வி எழுப்பினார். அதிமுக ஆட்சி முடிய இன்னும் 60 நாட்கள் மட்டுமே இருப்பதாக ஜோசியக்காரர் போல் ஸ்டாலின் பேசிவருவதாகவும், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் பறிபோகும் என்றார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி காலமானபோது, மனிதாபிமான அடிப்படையில் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய இடம் வழங்கியதை சுட்டிக்காட்டிய அமைச்சர், தாங்கள் நினைத்திருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இடம் கொடுக்க மறுத்திருப்போம் என்றும், பெருந்தலைவர் காமராஜருக்கு ஒரு நீதி, கருணாநிதிக்கு ஒரு நீதியா? என்று கேள்வி எழுப்பினார்.