சில நாள்களுக்கு முன்னதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து சுற்றறிக்கை ஒன்று வெளியாகியது. அதில், "கரோனா அவசர காலத்தில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லை. அதனால் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்து உதவுங்கள்'' என எழுதப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக தற்போது தென்மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஜூலை 1ஆம் தேதியிலிருந்து ஜூலை 9ஆம் தேதி வரை தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 538லிருந்து 1,595ஆக அதிகரித்துள்ளது.
இதில் 644 பேர் பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 941 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் முக்கியமாகப் பார்க்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் ராஜபாளையத்தின் கலங்கபேரி காவல் நிலைய தலைமைக் காவலர் கரோனாவால் உயிரிழந்தார். மொத்தமாகக் கணக்கிட்டால் விருதுநகரில் தற்போதைய நிலவரத்தின்படி 2,948 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறிப்பிட்ட காலத்திற்குள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் அதிகளவு பாதிப்பை கரோனா ஏற்படுத்தியுள்ளது. சில நாள்களிலேயே தொற்று பாதிப்பு மூன்று மடங்கு அதிகரித்ததற்கு மருத்துவர்கள் இல்லாததும், பரிசோதனை முடிவுகளை வருவதற்கு ஏற்படும் தொய்வுமே காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.
கரோனா பரிசோதனை செய்யும் இடங்களில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுவதில்லை. பெரும்பாலும் தொற்று அறிகுறி இருப்பவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கும் விரைவாகப் பரிசோதனை செய்யப்படுகிறது. இருப்பினும், பரிசோதனை முடிவு வருவதற்கு கால தாமதம் ஏற்படுகிறது. இந்தப் பரிசோதனை முடிவுகளை அறிந்துகொள்வதற்கு ஐந்து நாள்கள் ஆகிறது என மாணிக்கம் தாகூர் எம்பி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பெரும்பாலான நேரங்களில் தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவிய பின்னரே பரிசோதனை முடிவு வெளிவருகிறது. இதன் காரணமாகவே தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வதில் காலதாமதமாகிறது. இதன்மூலம் பலருக்குக் கரோனா தொற்று எளிதில் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளது.
அதிலும் விருதுநகர் மாவட்டத்தில் கரோனா பரிசோதனை செய்யும் இயந்திரம் அரசுத் தலைமை மருத்துவமனையில் மட்டுமே இருக்கிறது. அதிகப்படியான பரிசோதனைக் கருவிகளை மருத்துவமனைக்குக் கொண்டுவர வேண்டும் என்று சில நாள்களுக்கு முன்னதாக மாணிக்கம் தாகூர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்திருந்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தொடர்ந்து அதிகரித்துவருவதற்கு மருத்துவர்கள், செவிலியர், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோர் குறைவாக இருப்பதும் ஒரு காரணமே. ஏன் குறைவாக உள்ளார்கள் என்று கேள்வி கேட்டதற்கு, 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் சென்னைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர் என்ற பதில் வந்தது.
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசினோம். அவர், "விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தவரை மாவட்ட எல்லைகளில் உள்ள சாத்தூர், அழகாபுரி, சேத்தூர், சத்திரரெட்டியாபட்டி, ஆவியூர், ஆ.முக்குளம் ஆகிய ஆறு சோதனைச்சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, அதிகப்படியான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாவட்டங்களிலிருந்து வரும் மக்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே மாவட்டத்திற்குள் வர முடியும். கடைகள் திறக்கும் நேரத்தைத் தாமாகவே முன்வந்து வியாபாரிகள் குறைத்துள்ளனர். அதனால் விரைவில் கரோன வைரஸ் தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்படும்" என்றார்.
சோதனைச்சாவடிகள், ஊரடங்கு, கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு என அனைத்து விதமான நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், கரோனா பரிசோதனை இயந்திரங்களை அதிகப்படுத்தி, பரிசோதனை முடிவுகளை வேகமாக வெளியிட்டால் மட்டுமே அதிகப்படியான பாதிப்புகளைக் கட்டுப்படுத்த முடியும் என்பதே மாவட்ட மக்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.
இதையும் படிங்க: காடுகளின் கவசம் யானைகள்!