இயக்குநர் விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐய்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான க.பெ. ரணசிங்கம் திரைப்படம் கடந்த 2ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படத்தை பதிவிறக்கம் செய்து ராஜபாளையம் பீமராஜா சாலையில் தனியார் பள்ளிக்கட்டிடத்தில் செயல்படக்கூடிய கேபிள் டிவியில் ஒளிபரப்பு செய்துள்ளனர். இதை விஜய் சேதுபதியின் ரசிகர்கள் செல்போனில் வீடியோ எடுத்து விஜய் சேதுபதி, இயக்குநருக்கு அனுப்பி உள்ளனர்.
அதனடிப்படையில் சென்னையிலிருந்து வந்த இயக்குநர் விருமாண்டி, கதை ஆசிரியர் சண்முகம் உள்ளிட்டோர் கேபிள் டிவி செயல்பட்ட தனியார் பள்ளிக்குச் சென்று ஒளிபரப்பு செய்த கம்ப்யூட்டர் மற்றும் ஹார்டிஸ்க் போன்ற பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் தனியார் பள்ளி நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்ய புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன், படத்தை ஒளிபரப்பு செய்த உள்ளூர் கேபிள் டிவி பணியாளர்கள், பள்ளி தாளாளர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இது குறித்து படக்குழுவினர் கூறும்போது, "பல கோடி ரூபாய் செலவில் படம் எடுக்கப்பட்டு கரோனா காலத்தில் தியேட்டர்களில் வெளியிட முடியாமல் ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளோம். இதை பதிவிறக்கம் செய்து அவர்களுக்குச் சொந்தமான உள்ளூர் கேபிள் டிவியில் ஒளிபரப்பு செய்துள்ளனர். இது சட்டவிரோதமான செயல்.
இவர்கள் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்படவேண்டும். பலருடைய வாழ்வாதாரம் இதில் அடங்கியுள்ளது. பல கோடி ரூபாய் கடன் பெற்று வட்டி கட்டி வருகிறோம். இந்த நிலையில் இது போன்ற செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். நாங்கள் பள்ளி வளாகத்திற்குள் ஒரு பொருளை எடுத்தால் விடுவார்களா? எங்கள் உழைப்பைத் திருடி இருக்கிறார்கள், இவர்கள் மீது சட்டப்படி தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
இதையும் படிங்க: க/பெ.ரணசிங்கம் படத்திற்கு மோசமான விமர்சனம் - ப்ளூ சட்டை மாறனுக்கு சாவல் விட்ட இயக்குநர்