விருதுநகர்: அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் வரை பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதில், 9 பேர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இந்த மோசடி வழக்கிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்காக முன்பிணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை அவர் தாக்கல்செய்தார். ஆனால், அவரது முன்பிணை மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து தலைமறைவாகிய ராஜேந்திர பாலாஜியை 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பெங்களூரு, கர்நாடகா, கேரளா, சென்னை, உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் தேடி வந்தனர். பணமோசடி வழக்கில் 18 நாட்களாக தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை கடந்த ஜன.5ஆம் தேதி கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் பகுதியில் தனிப்படையினர் கைது செய்தனர்.
ஜன.6ஆம் தேதி ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பரம்வீர் முன்னிலையில் ஆஜர்படுத்தி, ஜன.20ஆம் தேதி வரை 15 நாள்கள் ராஜேந்திர பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்தநிலையில், மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் அவரது மகன் ஆதித்யனுக்கு ஆவினில் கிளை மேலாளர் வேலை வாங்கித்தருவதாக சுமார் 16 லட்சம் கொடுத்த புகாரில் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள மானகசேரியைச் சேர்ந்த பரமகுரு, கரூரைச் சேர்ந்த முத்துச்சாமி, திருச்சிச் சேர்ந்த பிரின்ஸ் சிவகுமார் மற்றும் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி ஆகியோர் மீது விருதுநகர் குற்றப் பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் தான் கொடுத்த புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட குற்றவியல் நடுவர் எண் 2 நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் மூலமாக மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை இன்று (ஜன.12) விசாரித்த நீதிபதி பரம்வீர் மாவட்ட குற்றவியல் காவல்துறை ஒரு மாதத்தில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
முன்னதாக, ராஜேந்திர பாலாஜி ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், நான்கு வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் - உச்ச நீதிமன்றம்