விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு ஆப்ரேசன் தியேட்டர் மற்றும் எக்கோ இயந்திரத்தை தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரியின் முதல்வர் சங்குமணி மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள், அலுவலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சங்குமணி, 'விருதுநகர் மகப்பேறு சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையில் இருந்தபோது, கட்டில் உடைந்து பிறந்து 5 நாளே ஆன குழந்தைக்கு காயம் ஏற்பட்ட விவகாரத்தில் 3 மருத்துவர்கள் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்தக் குழு விசாரணை முடிந்து இரண்டு நாட்களில் அறிக்கை கேட்கப்பட்டு உள்ளது' என அவர் தெரிவித்தார்.
மேலும் விசாரணை அறிக்கை கிடைத்தபிறகு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் மருத்துவமனையில் பழுதான கட்டில்களுக்குப் பதிலாக விரைவில் புதிய கட்டில்கள் மாற்றப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் மருத்துவப் பணியாளர்களுக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது என அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சங்குமணி தெரிவித்தார்.
இதையும் படிங்க:தரமற்ற அரசு மருத்துவமனை கட்டில் - கீழே விழுந்த கை குழந்தைக்கு தலையில் காயம்