கரோனா வைரஸ் தொற்று காரணமாக, மத்திய அரசு 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதைச் சமாளிக்க தமிழ்நாடு அரசு நிவாரண நிதியாக 5 கிலோ அரிசி உள்பட உணவு பொருள்கள் தொகுப்பு, ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படுமென அறிவித்திருந்தது.
இந்நிலையில், சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட திருத்தங்கல் நகராட்சியில் பாண்டியன் நகர் பகுதியில் தமிழ்நாடு அரசு சார்பில் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்பட்ட அரிசி தரமற்ற நிலையில், ஆடு மாடுகள் கூட உட்கொள்ள முடியாத தரத்தில் இருப்பதாகக்கூறி, சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அரிசியை சாலையில் கொட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
தொடர்ந்து 5 கிலோ என தெரிவித்து 3 கிலோ மட்டுமே வழங்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க...கள் விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது!