கரோனா வைரஸ் பரவல் தடுக்கும் நடவடிக்கையாக, நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் மத்திய, மாநில அரசுகள் சில தளர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதனடிப்படையில், தமிழ்நாட்டில் மே 7ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதற்கு, பொது மக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள் தங்களது கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கில், டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், ஆன்லைனில் மது விற்பனை செய்ய அனுமதியளித்தது. இதனைத்தொடர்ந்து, டாஸ்மாக் கடைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டன.
இந்நிலையில், விருதுநகர் மாலைப்பேட்டை தெருவில் உள்ள டாஸ்மாக் கடையின் பின்புறம் வைத்து மது விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், விருதுநகர் மேற்கு காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் கணேசன், விற்பனையாளர் மணிகண்டன் உள்ளிட்ட நான்கு பேர் சட்டத்திற்குப் புறம்பாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, அவர்கள் நான்கு பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து ரூபாய் 25 ஆயிரம் மதிப்புள்ள 154 மது பாட்டில்களையும், அவர்கள் பயன்படுத்திய டாடோ சுமோ வாகனத்தையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையும் பார்க்க: மலேசியாவில் தவித்த 177 தமிழர்கள் சிறப்பு விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தனர்.