விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ராஜாஜி ரோட்டில் உள்ள ரைஸ் மில்லில் புகையிலைப் பொருள்கள் இருப்பதாகக் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று காவல் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த அறையில் சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான புகையிலை மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் மூட்டை மூட்டையாக இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து ரைஸ் மில் உரிமையாளர் பாபு (48) என்பவரை விசாரணை செய்தபோது, ரைட் மில்லில் உள்ள ஒரு அறையை இனம்கரிசல்குலம் பகுதியைச் சேர்ந்த நவநீத கிருஷ்ணன் (36) என்பவர் வாடகைக்கு எடுத்துள்ளதாகவும், அதில் மசாலா பொருள்களை வைப்பதாக தன்னிடம் கூறியதாகவும் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
அதன் பெயரில் நவநீத கிருஷ்ணனைப் பிடித்து விசாரித்தபோது அவர், புகையிலை பொருள்களைப் பதுக்கி வைத்திருந்ததை ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடமிருந்து 7 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் பணத்தையும், 20 லட்ச ரூபாய் மதிப்பிலான புகையிலை, குட்கா பொருள்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நவநீத கிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
இதையும் படிங்க: ரூ. 3 லட்சம் குட்கா பறிமுதல்!