விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி களத்தூர் கிராமத்தில் முருகன் என்பவருக்கு சொந்தமான ஆர்கேவிஎம் பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலையில், உரிமம் பெற்று பேன்சி ரக வெடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது.
20க்கும் மேற்பட்ட அறைகள் உள்ள இந்த தொழிற்சாலையில் 50க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், இன்று (ஜனவரி 1) காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பட்டாசு மருந்து தயாரிக்கும் பணியின் போது எதிர்பாராதவிதமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
மீட்பு பணிகள் தீவிரம்
இதில், ஏழுக்கும் மேற்பட்ட அறைகள் வெடித்து சிதறி தரைமட்டமாயின. கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கும், தீயை அணைப்பதற்கும் சிவகாசியில் இருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மேலாளர் குமார், பெரியசாமி, செல்வம், வீரக்குமார் (எ) முருகேசன் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
எட்டு பேர் படுகாயம்
கோபாலகிருஷ்ணன், முனியாண்டி, காளியப்பன், அழகர்சாமி, முருகேசன் உள்ளிட்டோர் படுகாயம் அடைந்ததை அடுத்து, அவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த மனோ அரவிந்தன் (வயது 8), மனோ அரவிந்தனின் தந்தை கோபாலகிருஷ்ணன், முனியாண்டி, வேல்முருகன் ஆகிய நால்வர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து நத்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்திற்கு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன், வருவாய் துறையினர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து, பட்டாசு ஆலை வெடி விபத்து நடந்த இடத்தை மதுரை தென்மண்டல காவல்துறை தலைவர் காமினி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிங்க: சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து: 4 பேர் உயிரிழப்பு