இது குறித்து அவர் விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”விருதுநகரில் மருத்துவக் கல்லூரி அமையவுள்ளது. இதற்கு இப்போதைய அதிமுக ஆட்சிக் காலத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தாலும் மூலக்காரணம் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிதான். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து திமுகவினரை தரக்குறைவாகப் பேசிவருவது கண்டிக்கத்தக்கது. திமுகவினரின் சட்டையைப் பிடிப்பேன், வீட்டுக் கதவைத் தட்டுவேன், தேர்தலில் சித்து விளையாட்டைக் காட்டுவேன் என்றெல்லாம் பேசுகிறார்.
ஆறு கோடி பேரில் 32 பேருக்குதான் அமைச்சர் பதவி கிடைக்கிறது. அப்படிப்பட்டவர்கள் எவ்வளவு பொறுப்புடன் பேச வேண்டும். அரசியல் விமர்சனம் வேறு; இப்படிப் பேசுவது வேறு. விமர்சனங்களைக் கடந்து அவர் இப்படிப் பேசினால் திமுகவினரின் கை ஒன்றும் புளியங்கா பறித்துக்கொண்டு இருக்காது. திமுகவை அழிப்பது என்பது அதிமுக கட்சியாலோ அல்லது அதன் அமைச்சர்களாலோ முடியாது.
எங்களின் பலம் என்னவென்பது எங்களுக்குத்தான் தெரியும். உள்ளாட்சித் தேர்தலில் ராஜதந்திரமே பலிக்கும், ஆர்ப்பாட்டம் செய்து வெற்றிபெற முடியாது. ஜனநாயக ரீதியாக அமைதியான முறையில் நாங்கள் அரசியல் செய்கிறோம். எங்களுக்கு ஆர்ப்பாட்ட அரசியலில் நம்பிக்கையில்லை. ரஜினிகாந்த் சொல்வதுபோல் அரசியலில் வெற்றிடம் என்பதே இல்லை. மக்களை நடிகர்கள் முட்டாள்களாக நினைக்கின்றனர்.
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதற்கு முன்னதாக மக்களுக்கு சேவை செய்திருக்க வேண்டும். அவர்களுக்காக தியாகம் செய்திருக்க வேண்டும். சினிமாவில் நடித்துவிட்டு ஓய்வு காலத்தில் அரசியலுக்கு வந்தால் உண்மையான தியாகிகளுக்கு மரியாதை இல்லை. ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராவது மக்கள் கைகளில் இருக்கிறது.
ஸ்டாலினின் ஜாதகத்தில் முதலமைச்சராவதற்கான அமைப்பு இல்லை என ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். இதுநாள்வரை அவரை நான் அமைச்சரென்றுதான் நினைத்திருந்தேன். அவர் எப்போது ஜோதிடர் ஆனார் என்று எனக்குத் தெரியவில்லை” என்றார்.
இதையும் படிங்க:
உடல்நிலை சரியில்லாததால் கிணற்றில் விழுந்து மூதாட்டி தற்கொலை!