விருதுநகரில் பாஜக தேர்தல் அலுவலகத்தில், அச்சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் பேராசிரியர் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நாடாளுமன்றத்தில் தேவேந்திரகுல வேளாளர்களுக்கான மசோதா நேற்று (மார்ச்.21) சட்டமாக்கபட்டுள்ளது. இச்சட்டத்தால் பயனடைந்த தேவேந்திரகுல மக்கள் வரும் 27ஆம் தேதி 'தேவேந்திரரின் நன்றி மழையில் நனையும் மோடி' என்ற தலைப்பில் பொதுக்கூட்டத்தை நடத்த உள்ளனர். அந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஒருவர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.
விருதுநகரில் நிச்சயம் தாமரை மலரும். மறைந்த முதலமைச்சர் காமராஜரின் ஆசி பாஜகவிற்கு கிடைத்துள்ளது. அவர் உயிருடன் இருந்தால் பாஜகவிற்கு ஆதரவு தெரிவிப்பார். வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு மே 2ஆம் தேதி பாஜகவிற்கும் நாம் தமிழருக்கும் கிடைக்கும் வாக்குகள் தெளிவாகத் தெரியும் .
அரசியல்வாதிகளுக்கு தேர்வு வைத்தால் முதலில் தோல்வி அடைந்தவராக சீமான் இருப்பார். அதனால் தான் தேர்வு வேண்டாம் எனக் கூறுகிறோம். சீமானுக்கு ஆட்சிக்கும் கட்சிக்கும் உள்ள வேறுபாடு தெரியவில்லை. தமிழ் மக்கள் சீமானுக்கு மாநிலத்தின் கடனை அடைக்கும் கஷ்டத்தை தர மாட்டார்கள்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் அனுதாபத்தை தேடி திமுக வெற்றி பெற நினைப்பது கேவலம். அதற்கான அவசியம் திமுகவுக்கு ஏன் வந்தது?. திமுகவினர் கலைஞர் குறித்து பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுங்கள்" என்றார்.