தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் காலியாக உள்ள இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர், தீயணைப்பு வீரர் என 8,826 காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
இத்தேர்வுக்கு ஒரு திருநங்கையும் 12,451 ஆண்களும், 2,118 பெண்களும் சேர்த்து மொத்தம் 14,570 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 12,277 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். இதில், 644 பெண்கள் உள்பட 2,229 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சிப் பெற்றவர்களுக்கான உடற்தகுதித் தேர்வு விருதுநகர் தனியார் (கே.வி.எஸ்.) மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
உடற்தகுதித் தேர்வு ஆண்களுக்கும் பெண்களும் தனித்தனியே நடைபெற்றது. ஏற்கனவே ஆண்களுக்கு உடற்தகுதித் தேர்வு தொடங்கிய நிலையில் மூன்றாவது நாளில் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற 644 பெண்களுக்கு உடற்தகுதித் தேர்வுக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. ஆனால் அதில் 600 பெண்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
இதைத் தொடர்ந்து முதல் சுற்றில் வெற்றிபெறுவோர் அடுத்தடுத்த சுற்றுகளில் அனுமதிக்கப்படுவர். இம்மாதம் 12ஆம் தேதி வரை உடற்தகுதித் தேர்வுகள் நடைபெறும். உடற்தகுதித் தேர்வு நடைபெறுவதைக் கண்காணிக்க காவலர் பயிற்சி பள்ளி டிஐஜி சத்யபிரியா, சிறைத்துறை டிஐஜி பழனி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ஊட்டச்சத்து குறைபாடு: பாஜகவின் உணவு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா காங்கிரஸ்?