விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சி கிராமத்தில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வசித்துவருகின்றனர். நேற்று (ஜூன் 14) மாலை அப்பகுதி வழியாக அருகில் உள்ள சின்ன செட்டிகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்றுள்ளனர். அங்கு விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டதால் கிராம மக்கள் அவர்களை மெதுவாகச் செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் இளைஞர்களுக்கும், ஊர் மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த இளைஞர்கள் சின்ன செட்டிகுறிச்சியிலிருந்து இருபதிற்கும் மேற்பட்ட இளைஞர்களை அழைத்துவந்துள்ளனர். கம்பு, அரிவாள், கற்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த இளைஞர்கள் கிராமத்தினருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இருதரப்பினரிடையே கைகலப்பு முற்றியுள்ளது. வீடுகள் மீதும் பொதுமக்கள் மீதும் கற்களை கொண்டு தாக்கியுள்ளனர். இதில் பெண்கள் உள்பட பத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஒரு சில வீடுகளில் மீட்டர் பெட்டிகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
மோதல் குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் பாதுகாப்பிற்காக செட்டிகுறிச்சி கிராமத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: புதுச்சேரி சபாநாயகர் -பாஜக எம்.எல்.ஏ. செல்வம் போட்டியின்றி தேர்வு