விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள கோட்டைபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முனியசாமி (45), நாகராஜ்(40). இவர்கள் இருவரும் தங்களது வீட்டில் நாய் வளர்த்து வருகின்றனர்.
இதனிடையே கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட்.20) முனியசாமியின் நாய், நாகராஜின் நாயை கடித்துள்ளது. நடுவில் தடுக்க முயன்ற நாகராஜையும் கடித்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த நாகராஜும் அவரது இருமகன்களும் முனியசாமியின் நாயை கட்டையால் அடித்துக் கொலை செய்தனர். அப்போது அருகில் இருந்தவர்கள் இதனை வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
அந்த வீடியோ வேகமாகப் பரவியதையடுத்து, விருதுநகரைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் முருகன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
அப்புகாரின் பேரில் காவல் துறையினர் நாகராஜ், அவரது இரண்டு மகன்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.