விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு கிராமத்தில் வசித்து வருபவர் ஆதிமூலம்(45). சிங்கப்பூரில் லேப் டெக்னீசியனாகப் பணிபுரிந்து வந்த இவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பி, தந்தை கவனித்து வந்த விவசாயத்தை செய்யத் தொடங்கினார். தங்களது நிலத்தில் நடைமுறையில் இருந்த வாய்க்கால் பாசனத்தை மாற்றி புதிய பாசன முறையான சொட்டுநீர் பாசனமுறையை புகுத்தியுள்ளார். சொட்டு நீர் பாசனமுறையில் அதிக மகசூலைப் பெறமுடியும் என்பதையும் அவர் அவ்வூர் மக்களுக்கு நிரூபித்துக் காட்டியுள்ளார்.
சொட்டு நீர் பாசனம் செய்யும் விவசாயிகளுக்கு அரசு வழங்கும் மானியங்கள், ஏழை விவசாயிகளை சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த மானியங்களை முற்றாக நிராகரித்துள்ளார் ஆதிமூலம். தனது சொந்த முதலீட்டில் விவசாய இயந்திரங்களை வாங்கி தற்போது, கொய்யா சாகுபடியில் ஈடுபட்டுள்ளார். 2 ஏக்கரில் கொய்யா சாகுபடி செய்துவரும் இவர், வருடத்திற்கு 3 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுவதாகத் தெரிவிக்கிறார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், "வெளிநாட்டில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தேன். லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி வந்தாலும் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து இருந்திருந்தது வருத்தமளித்தது. 90 வயது நிரம்பிய எனது தந்தைக்கு திடீரென உடல் நிலை சரியில்லாது போக, அவருடன் இருக்க விரும்பி சிங்கப்பூரில் பார்த்த வேலையை விட்டு சொந்த ஊர் திரும்பினேன்.
பின்பு, தந்தை கவனித்து வந்த விவசாயத்தை பார்ப்போம் என்ற ஆர்வத்தில் விவசாயத்தில் இறங்கினேன். அப்போது, சொட்டு நீர் பாசன முறை இப்பகுதியில் பிரபலமாக இல்லை. நான் அந்த முறையில் விவசாயம் செய்ய விரும்பினேன். அரசு இதற்கு மாநியம் வழங்கும் என எனது நண்பர்கள் கூறினாலும் அரசிடம் மாநியம் பெற நான் விரும்பவில்லை. அந்த மாநியங்கள் உண்மையிலேயே ஏழ்மையில் உள்ள விவசாயிகளுக்கு கிடைக்கட்டும் என்று எண்ணி நான் அதை நிராகரித்தேன். சொந்த முதலீட்டில் சொட்டு நீர் பாசனத்திற்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் வாங்கி, 2 ஏக்கர் நிலத்தில் கொய்யா பயிரிட்டுள்ளேன்.
தற்போது, நாளொன்றுக்கு 150 கிலோ முதல் 200 கிலோ கொய்யாப்பழம் வரை கிடைக்கிறது. கூடுதலாக மா, நெல்லிக்காய், பப்பாளி ஆகிய மரங்களையும் வளர்த்து வருகிறேன். வெளிநாட்டு தனிமை வாழ்க்கையில் இருந்த நான் தற்போது மகிழ்வுடன் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவதோடு குடும்பத்தோடு இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.
இதையும் படிங்க: சந்தையில் புதிதாக அறிமுகமாகியுள்ள மூலிகை ப்ளூடூத் முகக்கவசம்!