விருதுநகர் அருகே ஆமத்தூரில் கணேசன் என்பவருக்குச் சொந்தமான சோனி பட்டாசு ஆலை உள்ளது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை (ஜூலை 7) வழக்கம் போல் பணிக்கு வந்த பணியாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக பட்டாசு தயாரிப்பில் ஏற்பட்ட உராய்வால் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தவசிலிங்கபுரத்தைச் சேர்ந்த ராமகுருநாதன் என்பவர் படுகாயமடைந்தார்.
வெடி விபத்தில் ஆலை வளாகத்தில் இருந்த ஒரு அறை முற்றிலும் தரைமட்டமானது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர், சம்பவம் நடந்த இடத்திற்க்கு விரைந்து வந்து படுகாயமடைந்த ராமகுருநாதனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு ராமகுருநாதன் அழைத்து செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஆமத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், கடந்த சில மாதங்களாக பட்டாசு தொழிற்சாலைகள் இயங்காமல் இருந்தன. இதன் காரணமாக, பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள் நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது தொழிற்சாலைகள் இயங்கியவுடன் மீண்டும் வெடி விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது அப்பகுதி தொழிலாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ: தீயணைப்புத் துறையின் துரித பணியால் அசம்பாவிதம் தவிர்ப்பு!