விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பரளச்சி என்ற கிராமத்தில் கணேசன் என்ற முன்னாள் ராணுவ வீரர் வசித்துவருகிறார். இவர் இயற்கை விவசாயம் செய்து தனது வாழ்க்கையை செழுமையுடன் நடத்திவருகிறார். இவர் நான்கு மாதங்களுக்கு முன்பு அருப்புக்கோட்டையிலிருந்து தன் சொந்த ஊரான பரளச்சி செல்லும் வழியில் மனநலம் பாதிக்கப்பட்டு, மயக்கமடைந்த நிலையிலிருந்த ஒடிசாவைச் சேர்ந்த அசோக் குமார் என்பவரை பார்த்துள்ளார்.
இதையடுத்து அவரைக் காப்பாற்றி முதலுதவி செய்து தன் வீட்டிலேயே தங்க வைத்து உணவளித்து பாதுகாத்துவந்துள்ளார். அசோக் குமாரை அவரது பெற்றோரிடம் சேர்த்து விட வேண்டும் என்று பல முயற்சிகள் செய்துள்ளார். அதன்பின்னர் ஒடிசாவில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவரின் தம்பியைத் தொடர்புகொண்டு கணேசன் பேசியுள்ளார். அவரிடம் அசோக் குமார் தமிழ்நாட்டில் இருப்பதாகவும், வந்து அழைத்துச் செல்லுமாறும் கணேசன் கூறியுள்ளார். அதற்கு அவர் அண்ணன் கிடைத்ததில் மகிழ்ச்சியடைந்ததாகவும், விரைவில் வந்து அவரை அழைத்துச் செல்வதாகவும் அசோக்கின் தம்பி அட்சய குமார் கூறியுள்ளார்.
அதன்படி அவர் நேற்று தன் அண்ணனைக் காண பரளச்சியில் உள்ள கணேசன் வீட்டிற்கு வந்தார். அண்ணனைப் பார்த்தவுடன் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இதையடுத்து, கணேசன் பரளச்சி காவல் நிலையம் சென்று, காவலர்கள் முன்னிலையில் அசோக் குமாரை அவரது தம்பியிடம் ஒப்படைத்தார். கணேசன் இதுவரை மனநிலை பாதிக்கப்பட்ட வெளிமாநிலத்தவர் 13 பேரை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'கால்கள் போனால் என்ன காதல் இருக்கிறது' - மலையாள காதல் கவிதை!