விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே தொட்டியங்குளம் பகுதியில் இன்று (ஜனவரி 8) காலை சென்னையிலிருந்து செங்கோட்டை நோக்கி வந்த சிலம்பு விரைவு ரயில் இன்ஜினில் மின்சார வயர்கள் சிக்கி விபத்து ஏற்பட்டது.
உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்ற ரயில்வே ஊழியர்கள் இன்ஜினில் சிக்கிய மின்வயர்களை அப்புறப்படுத்தினர். இதனால் இரண்டு மணி நேரம் தாமதமாக சிலம்பு விரைவு ரயில் செங்கோட்டை நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.
விருதுநகர் - மானாமதுரை இடையே மின்மயமாக்கல் பணி ரயில்வே மூலம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழி வரை மின் கம்பிகளை மின் கம்பத்தில் பொருத்தும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
நேற்று (ஜனவரி 7) தொட்டியங்குளம் பகுதியில் மின்கம்பத்தில் வயர்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே ஊழியர்கள் மாலை நேரத்தில் பணியை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று சிலம்பு விரைவு ரயில் இன்ஜினில் மின் வயர்கள் சிக்கி விபத்து ஏற்பட்டது. இது குறித்து ரயில்வே காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டப் போராட்டம் - அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்