ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் வளாகத்தில் நேற்று (மார்ச்5) கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி கோலப்போட்டி நடைபெற்றது.
இதில் முதல் பரிசை ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் தட்டிச்சென்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மாவட்டம் முழுவதும் தேர்தலுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு பணிகள் குறித்த விஷயத்தில் துணை ராணுவம் துணையோடு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். இன்று (மார்ச்6) மாலை ஐந்து மணிக்கு அனைத்து அரசியல் கட்சிகள் முன்பாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வரிசைப்படுத்தப்படும். மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளுக்கும் ஈவிஎம் (EVM) இயந்திரங்கள் பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்கப்பட்டு இயந்திரங்கள் வைத்திருக்கும் இடங்கள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.
தற்போது உள்ள நிலையில் 91 வாக்குசாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று கண்டறியப்பட்டுள்ளன. இனி வரும் நாள்களில் அது கண்காணிக்கப்பட்டு அதற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். மாவட்டத்தில் உள்ள 50 விழுக்காடு வாக்குச்சாவடிகள் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி கண்காணிப்பு கேமரா மூலம் நேரடியாக பதிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘வேண்டாம் CAA - NRC’ - கருணாநிதி, ஸ்டாலின் வீடுகளில் கோலப் போராட்டம்!