விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை ஈஸ்வரன் (45). இவர் 13ஆவது வார்டு திமுக ஒன்றிய கவுன்சிலராக இருந்தார்.
கடந்த ஆண்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியாக அண்ணாமலை ஈஸ்வரன் கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஆறு மாதத்திற்கு முன்பு அண்ணாமலை ஈஸ்வரன் பிணையில் வெளியே வந்தார்.
தொடர்ந்து, இன்று (ஏப்ரல்.14) தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு அவர் சேத்தூர் கரையடி விநாயகர் கோயிலுக்குச் சென்றார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் அண்ணாமலை ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துணைக் கண்காணிப்பாளர் நாகசங்கர் தலைமையிலான காவல் துறையினர், அவரது சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்தக் கொலை பழி வாங்கும் விதமாக நடந்ததா, அல்லது வேறு ஏதும் காரணத்தால் நடந்ததா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவு: பெண் எரித்துக் கொலை