விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல பௌர்ணமி, அமாவசை நாள்களில் மட்டும் வனத்துறையினரால் அனுமதி அளிக்கப்படும். ஆனால் ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
வருகின்ற கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு நாளை முதல் வரும் 16ஆம் தேதிவரை 4 நாள்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் உடல் வெப்ப பரிசோதனைக்கு பின் காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை அனுமதிக்கபடுவார்கள். வரும் 16ஆம் தேதி மட்டும் காலை 7 மணி முதல் 10 மணிவரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கபடுவார்கள் என வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மழை பெய்துள்ள சூழ்நிலையால் ஓடைகளில் நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் பக்தர்கள் குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்காக தரிசனம், அன்னதானம், குடிநீர் வசதி ஆகிய ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.