விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேவுள்ள சூலக்கரை ஊராட்சியில், ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர், புஷ்பம் மற்றும் செயலாளராக இருப்பவர் தங்கவேல். இவர்கள் இருவரும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு, அரசு வழங்கும் சலுகைகளில், பல்வேறு ஊழல்களை செய்துள்ளதாகவும், சட்ட விரோதமாக ஊராட்சி மன்ற துணைத் தலைவரை தகுதி நீக்கம் செய்ய முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்கள் இருவரின் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறி, சூலக்கரை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சதீஷ் குமார், நேற்று (ஜூலை 17) பொதுமக்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின் தகவலறிந்து வந்த சூலக்கரை காவல் துறையினர், இது குறித்து ஊராட்சி மன்ற துணைத் தலைவரிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இப்பேச்சுவார்த்தையின் முடிவில் சம்பந்தப்பட்ட இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய பின்பு, தர்ணா போராட்டத்தைக் கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் பொதுமக்கள், ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு, தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.