சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 1,100 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், 3 லட்சத்திற்கும் அதிகமானோர் உபதொழில்கள் மூலமும் இதனால் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசு தேவையில் 95 விழுக்காட்டை இங்குள்ள பட்டாசு ஆலைகளே நிறைவு செய்கின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.7 ஆயிரம் கோடி வரை பட்டாசு விற்பனை நடைபெற்றாலும், கடந்த 4 ஆண்டுகளாக இத்தொழில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு சந்தையில் வாடிக்கையாளர் கூட்டம் குறைவாகவே உள்ளது என்றும், கரோனா காரணமாக உற்பத்தி முழுமையாக நடைபெறவில்லை எனவும் பட்டாசு விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். அதனால் கடந்த ஆண்டு விலையிலேயே தற்போதும் பட்டாசு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் விற்பனை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்பதால், இரவு நேரத்தில் கடையை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என அவர்கள் வேண்டுகின்றனர்.
வழக்கமாக ஆயுத பூஜையை தொடர்ந்து விற்பனை களை கட்டும் பட்டாசு கடைகள், இந்த ஆண்டு வாடிக்கையாளர்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கரோனோ பொது முடக்கம் காரணமாக வழக்கமாக 20 நாட்களுக்கு முன்னர் வரும் வெளியூர் வாடிக்கையாளர்கள் இதுவரை வரவில்லை எனவும் தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக விற்பனை சூடு பிடிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: 'தொழில்துறை பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள முதலமைச்சர் திட்டம்' - உடுமலை ராதாகிருஷ்ணன்