கல்லூரி மாணவிகளைத் தவறாக வழி நடத்தியதாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த உதவி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு விருதுநகர் சிபிசிஐடி காவல் துறையினருக்கு மாற்றப்பட்டது. அதையடுத்து பேராசிரியை நிர்மலா தேவிக்கு உடந்தையாகச் செயல்பட்டதாக மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
தற்பொழுது ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் பொழுது சம்பந்தப்பட்ட சாட்சிகள், கல்லூரி மாணவிகள் ஆகியோரிடம் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது. மேலும், வழக்கில் தொடர்புடைய உதவி பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டனர்.
'நான் மாணவிகளை குழந்தையாக பார்த்து வருகிறேன்' - நீதிபதி முன்பு மயங்கி விழுந்த நிர்மலா தேவி!
பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு இன்று வரவில்லை. அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்காகத் திருநெல்வேலி அழைத்துச் செல்லப் படுவதாகவும் கூறி அவரது வழக்கறிஞர் சார்பில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி பரிமளா, பேராசிரியை நிர்மலா தேவிக்குப் பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கு விசாரணையை இம்மாதம் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.