விருதுநகர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் கரோனா தொற்றைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இருப்பினும் தற்போது வரை விருதுநகரில் 8 ஆயிரத்து 491 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தற்காலிக சந்தைகள் ஏற்படுத்தப்பட்டு, கூட்ட நெரிசலைக் குறைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விருதுநகர் உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்து வரும் ஆறு வியாபாரிகளுக்குக் கரோனா தொற்று நேற்று(ஆகஸ்ட் 2) உறுதியானது. அதைத்தொடர்ந்து உழவர் சந்தையை இன்று(ஆகஸ்ட் 3) முதல் தற்காலிகமாக மூடுவதாக நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி அறிவித்துள்ளார்.
மேலும், இச்சந்தையில் வியாபாரம் செய்து வரும் 60க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சந்தையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில் வியாபாரிகளுக்குத் தொற்று ஏற்பட்டிருப்பது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கடந்த சில தினங்களாக சந்தைக்குச் சென்று வந்த பொதுமக்களை பரிசோதனையை மேற்கொள்ள நகராட்சி சார்பிலும், மாவட்ட நிர்வாகம் சார்பிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.