விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் விதமாக மாவட்டத்தில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு அப்பகுதிகளுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி விருதுநகரில் 177 பகுதிகளுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
தற்போது கடந்த சில தினங்களாக கரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வரும் சூழ்நிலையில் 177 பகுதிகளிலிருந்து 108 பகுதிகளுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தி மாவட்ட ஆட்சியர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில், "தடை செய்யப்பட்ட பகுதிகளில் பொது மக்கள் நடமாட்டம் இருக்கக்கூடாது. அத்தியாவசியக் கடைகள் தவிர மற்ற வணிகக் கடைகள் செயல்பட தடை செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ள்ளார்.
தற்போது வரை விருதுநகரில் ஒன்பதாயிரத்து 542 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. ஏழாயிரத்து 627 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும், ஆயிரத்து 805 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை சிகிச்சைப் பலனின்றி 116 பேர் உயிரிழந்துள்ளனர்.