காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தலை நவீன டிஜிட்டல் முறையில் பதிவு செய்யும் முறையை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. ஆளுங்கட்சியின் (பாஜக) துணையின்றி இவ்வளவு பெரிய தவறை செய்திருக்க முடியாது.
இந்த ஊழல் விவகாரத்தை விசாரிக்க உச்ச நீதிமன்ற நேரடி கண்காணிப்புடன்கூடிய சிபிஐ விசாரணை வேண்டும். வெறும் சிபிஐ விசாரணை என்றால் பாஜகவினர் அனைவரும் நல்லவர்கள் என்று கூறி வழக்கை முடித்துவிடுவர்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பல மாநிலங்களிலும் இதில் எப்படி ஊழல் நடந்திருக்கிறது என்று கண்டறிய வேண்டும். எவ்வித விதிகளுமின்றி யாரெல்லாம் ஆதார் அட்டை, வங்கிக் கணக்குகள் வைத்துள்ளனரோ அவர்களுக்கு ஆறாயிரம் ரூபாய் அளிக்கப்பட்டுள்ளதால் இதனை மிகப்பெரிய ஊழலாகவே பார்க்க முடிகிறது.
கமலாலாயத்தில் ஒருங்கிணைப்பதற்காக ஒரு குழு அமைத்து ”தமிழ்நாட்டில் உள்ள எந்த வங்கியிலிருந்தும் உங்களுக்கு கடன் வேண்டுமா? வேண்டும் என்றால் இந்தக் குழுவை அணுகுங்கள்” என்றெல்லாம் கமலாலயம் சொல்கிறது.
காங்கிரஸ் ஆட்சியின்போது கட்சித் தலைமை சார்பில் இது போன்று வேண்டுகோள் வைக்கப்பட்டதில்லை. இது போன்று இணையதளம் தொடங்கப்பட்டதில்லை. இதனால் ஐயம் தோன்றுகிறது.
மத்திய அரசின் இந்தத் திட்டத்தில் மிகப்பெரிய தவறு இழைக்கப்பட்டிருப்பது வெளியே வந்துள்ளது. மடியில் கனம் இல்லாதவர்கள் உடனடியாக உச்ச நீதிமன்ற நேரடி கண்காணிப்புடன் சிபிஜ விசாரணைக்கு தயாராக வேண்டும்” எனக் கூறினார்.