அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அதிமுக மாவட்டச் செயலாளராக அக்கட்சித் தலைமை மீண்டும் அறிவித்ததை அடுத்து, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஆலங்குளம் பகுதியில் அமைச்சரின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அதே வேளை நரிக்குடி ஒன்றியத்தில் உள்ள ரவிச்சந்திரன் என்பவரை நியமனம் செய்து அறிவிப்பு வெளியானதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு சிறிது நேரத்தில் மாற்றப்பட்டு வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள ரவிச்சந்திரனுக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு கிடைத்துள்ளதாகவும், அதை அவரது அலுவலகத்தில் கொண்டாடியபோது, சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மனின் ஆதரவாளர்களுக்கும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அதில் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து, பொய் வழக்கு பதிவதாகக் கூறிய ராமுத்தேவன் பட்டியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.