விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உருவ பொம்மையை எரிக்கப்போவதாக திமுகவினர் அறிவித்திருந்த நிலையில், இன்று (டிசம்பர் 7) காலை 10 மணி முதலே அதிமுகவினர் காந்தி சிலை பகுதியில் குவிந்தனர். அமைச்சருக்கு ஆதரவாகவும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராகவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
திமுகவினர் மற்றொரு பாதை வழியாக ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை அருகே பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது ஒருகட்டத்தில் இரு கட்சியினர் இடையே கைகலப்பாக மாறியது.
இதனால் திமுகவினர், ராஜேந்திர பாலாஜி உருவ பொம்மை, படத்தை மீண்டும் எரித்தனர். இதனைத் தொடர்ந்து அதிமுகவினர் திமுக தலைவர் ஸ்டாலின் படத்தை செருப்பால் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கூட்டத்திலிருந்து செருப்பு, கல் வீசப்பட்டதால் இரு தரப்பினரிடையே மோதல் முற்றியது. இதை கட்டுப்படுத்த காவல் துறையினர் தடியடி நடத்தி இருதரப்பினரையும் அங்கிருந்து கலைத்தனர்.
இந்த கலவரத்தில் இமாம் சாதிக் என்னும் திமுக உறுப்பினருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் அதிமுகவினரை கைது செய்ய வலியுறுத்தி திமுகவினர் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் அமைச்சரின் உருவபொம்மையை எரித்த திமுகவினரை கைது செய்யக்கோரி அதிமுகவினர் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.