விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், பாஜக அரசு இரண்டாவது முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியில் உள்ளது. தனது ஆட்சி அதிகாரத்தை அனைத்து மாநிலங்களிலும் கொண்டுவரவேண்டும் என்று தன்னாட்சி திட்டத்தைக் கொண்டு வந்து ஜனநாயக விரோத முறையில் மகாராஷ்டிராவில் சூழ்ச்சி செய்து ஆட்சி அமைத்துள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் அதிகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆண்டுக்கு 150 பேர் கொலை செய்யப்படுகிறார்கள். இவற்றைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும். சுடுகாட்டிற்குச் செல்ல தனிப்பாதை என்று இன்னும் தீண்டாமை நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு நடைமுறைக்கு மாறாக மறைமுக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது; தவறானது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இலங்கையில் கோத்தபய ராஜபக்சே அதிபராகவும், மகேந்திர ராஜபக்சே பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால் நமக்கு ஆபத்து அதிகமாக உள்ளது.
அவர்களை இந்தியாவிற்கு மத்திய அரசு அழைப்பது சரியல்ல. இது தமிழ் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயலாகும். 2021ஆம் ஆண்டு அதிசயம் நிகழும் என ரஜினி கூறியிருப்பது அந்த அதிசயம் என்பது ரஜினிக்கே தெரியும். அதிசயத்தால் ஒன்றும் நடக்கப்போவதில்லை. அவர் எந்த அதிசயத்தைச் சொல்கிறார் என்று நமக்குத் தெரியவில்லை என்று அவர் கூறினார்.