ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா கடந்த மாதம் கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் நடக்கும் புத்துணர்வு முகாமுக்கு சென்றது. அப்போது பாகன் யானையை அடிக்கும் வீடியோ வெளியானது.
இதனைத் தொடர்ந்து யானை பாகன் கைது செய்யப்பட்டார். கோயில் நிர்வாகமும் பாகனை பணி இடைநீக்கம் செய்தது. இதனால் பாகனின்றி முகாமில் பாதுகாக்கப்பட்டு வந்த யானை உளவியல் காரணங்களுக்காக மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கே திருப்பி அனுப்பப்பட்டது. தற்போது ஏற்கனவே யானையிடம் பழகிய பாகன்களான சுப்பிரமணியன், திருப்பதி ஆகியோரின் பராமரிப்பில் யானை இருந்து வருகிறது.
முகாமில் இருந்து திரும்பிய யானை உற்சாகமாக நீரில் குளித்தும், தும்பிக்கையால் தன் மேல் நீரை அடித்தும் விளையாடி வருகிறது. யானைக்கு சத்தான உணவுகளையும் பாகன்கள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் முகாமில் இருந்து திரும்பிய யானை ஆரோக்கியமாக உள்ளதா? அதன் செயல்பாடுகள் எப்படி உள்ளது? புதிய பாகன்கள் யானையை எவ்வாறு கவனிக்கிறார்கள்? போன்றவற்றை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பர்வையிட்டனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கண்ணன் கூறுகையில், “யானை தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கும். சிறிது நாள்களுக்குப் பிறகு கோயிலுக்கு அழைத்துவரப்பட்டு கோயில் நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தப்படும்” என்றார். யானையை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சித் தலைவர், அரசு அலுவலர்கள் யானைக்கு பழம் உள்ளிட்ட உணவுகளை வழங்கினார்.
இதையும் படிங்க : நாங்கள் ஸ்வீட் பாக்ஸ் கேட்கும் கட்சி இல்லை - திருமாவளவன் பேச்சு