விருதுநகர்: தமிழ்நாட்டில் பக்தர்கள் அதிகம் கூடும் கோயில்களில், பக்தர்களின் வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவ மையம் அமைக்க, இந்து சமய அறநிலையத்துறைக்கு, தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. அதன் அடிப்படையில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், கள்ளழகர் திருக்கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், பண்ணாரி மாரியம்மன் கோயில் மற்றும் சங்கரன்கோயில் ஆகிய கோயில்களில் 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவ மையம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று(டிசம்பர் 2) மேற்கூறிய கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவ மையத்தை, முதலமைச்சர் ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதில், இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் அமைக்கப்பட்ட மருத்துவ மையத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி முன்னிலை வகித்தார். பின்னர் மருத்துவ மையத்தின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார்.
இருக்கன்குடி மாரியம்மன் கோயில், தமிழ்நாட்டில் பிரசித்திபெற்ற கோயிலாக விளங்கி வருகிறது. இந்த கோயிலுக்குப் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்தக் கோயிலுக்கு, ஆண்டுக்கு 25 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் வந்து செல்வதாக கூறப்படுகிறது. இருக்கன்குடி மாரியம்மனை தரிசித்தால், தீராத வயிற்றுவலி, கண்வலி, அம்மை நோய் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகவுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 5 கோயில்களில் மருத்துவ மையங்கள் திறப்பு